Wednesday, June 24, 2015

இரண்டாண்டு பி.பி.எட்., படிப்பில் யோகா, கராத்தே


பி.பி.எட்., எனப்படும் உடற்கல்வியியல் இரண்டு ஆண்டு படிப்பில் புதிதாக யோகா, கராத்தே, ஜூடோ உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பி.எட்., மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக எம்.எட்., படிக்க வேண்டும். யு.ஜி.சி., ம ற்றும் தேசிய கல்வியியல் ஆசிரியர் பயிற்சி பல்கலை (என்.சி.டி.இ.,) இணைந்து பி.எட்., படிப்புக்கு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.
அதன்படி, பி.எட்., எம்.எட்., படிப்புக்காலம் இனி இரண்டு ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் பி.எட்., படிப்புக்கு 723 கல்லுாரிகள், உடற்கல்வியியல் படிப்பான 'பி.பி.எட்.,' படிப்புக்கு 19 கல்லுாரிகள், எம்.எட்.,க்கு 140 கல்லுாரிகள் அனுமதி பெற்றுள்ளன. இதற்கான பாடத்திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. காரைக்குடி அழகப்பா பல்கலை கட்டுப்பாட்டில்
உள்ள உடற்கல்வியியல், கல்வியியல் கல்லுாரிகள் இரண்டு ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற்றுள்ளன. உடற்கல்வியியல் கல்லுாரியில் பி.பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 15. ஒரு யூனிட்டுக்கு 50 மாணவர்கள் வீதம், 2 யூனிட் மாணவர்கள் முதலாண்டில் சேர்க்கப்பட உள்ளனர். இதே போல் 40 இடங்கள் உள்ள, எம்.பி.எட்., படிப்புக்குக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நேர்முகத்தேர்வு வரும் 24-ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
இப்படிப்பில்,கால்பந்து, கையுந்துபந்து, கைப்பந்து, ஹாக்கி, வளைகோல், கூடைப்பந்து, தடகளம் ஆகிய விளையாட்டு மட்டும்முன்பு செய்முறை பயிற்சியாக இருந்தது. கூடுதலாக யோகா, கராத்தே, ஜூடோ, சிலம்பம், மலையேறுதல் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தவும் கூறப்பட்டுள்ளது.

Tuesday, May 26, 2015

பி.எட்., எம்.எட். படிப்பு நாடு முழுவதும் இனி இரண்டு ஆண்டுகளாக அமல்: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர்

நாடு முழுவதும் பி.எட், எம்.எட். படிப்புகள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்பட்டு, நிகழாண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுவதாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பண்டா திங்கள்கிழமை கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இந்தியா முழுவதும் கல்வியியல் படிப்பு என்ற பி.எட் படிப்பையும், முதுநிலை கல்வியியல் படிப்பான எம்.எட் படிப்பையும் இரண்டாண்டு படிப்பாக மாற்றியமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதையடுத்து ஆசிரியர் கல்வி கவுன்சில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், கல்வித்துறைச் செயலர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்தது. அப்போது பி.எட், எம்.எட் படிப்புகளை இரண்டாண்டு கால அளவு கொண்டதாக மாற்றி முடிவெடுக்கப்பட்டது.நாடு முழுவதும் இரண்டாண்டு பி.எட், எம்.எட் படிப்பு நிகழ் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. ஒரு சில மாநிலங்களில் நிகழாண்டு மட்டும் பி.எட், எம்.எட் படிப்பு ஓராண்டாக இருக்கும் என்ற தவறான தகவல் பரவுகிறது. அது உண்மையல்ல. அனைத்து மாநிலங்களிலும் நிகழாண்டு முதல் பி.எட், எம்.எட் படிப்புக்கள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்படுகிறது.
மேலும் ஒருங்கிணைந்த (பி.எட், எம்.எட் படிப்பை சேர்த்து படிப்பவர்களுக்கு) 3 ஆண்டுகளாகவும், ஒருங்கிணைந்த பி.எஸ்.சி. பி.எட் அல்லது பி.ஏ. பி.எட் ஆகியபட்டப் படிப்புகள் நான்கு ஆண்டுகளாகவும் இருக்கும். மேலும் இரண்டு வருடம் படிக்கிற ஆசிரியர் பயிற்சி படிப்பில் எந்தவித மாற்றமும் இல்லை. எனவே தனியார்,அரசு கல்வியியல் கல்லூரிகள் புதிய விதிகளுக்கேற்ப பேராசிரியர்களை நியமிப்பதுடன் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.இக் கருத்தரங்கில் ஆசிரியர் கல்வித் துறைப் பேராசிரியர்கள், கல்வியியல் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

Monday, March 23, 2015

Thursday, February 19, 2015

ஒரே ஆண்டில் இரு பட்டங்கள் ஆசிரியர் பணி வழங்க உத்தரவு
ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி வழங்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.
திண்டுக்கல் தீபா தாக்கல் செய்த மனு: பி.ஏ., (தமிழ்) 2004--07 ல் படித்தேன். பி.எட்.,ஜூலை 2008ல் தேர்ச்சி பெற்றேன். 2008ல் எம்.ஏ., (தமிழ்) படிப்பில் சேர்ந்தேன். 2009 நவம்பரில் எம்.ஏ.,தேர்ச்சி பெற்றேன். முதுகலை பட்டதாரி (தமிழ்) ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு 2012 அக்டோபரில் எழுதினேன். 108 மதிப்பெண் பெற்றேன்.'எம்.ஏ., மற்றும் பி.எட்., ஒரே ஆண்டில் படித்துள்ளதால் விதிகள்படி பணி நியமனம் வழங்க முடியாது' என ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் 2013 ஜன.,20 ல் நிராகரித்தார். அதை ரத்து செய்து பணி வழங்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் வி.பன்னீர்செல்வம், ராமநாதன் ஆஜராகினர்.
நீதிபதி உத்தரவு: மனுதாரர் பி.ஏ., முடித்தபின் பி.எட்., படித்துள்ளார். பின் எம்.ஏ., படித்துள்ளார். பி.எட்., மற்றும் எம்.ஏ., ஒரே காலத்தில் படிக்கவில்லை. பணி மறுத்த உத்தரவு ரத்து செய்யப்
படுகிறது. மனுதாரருக்கு முதுகலை ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.

Saturday, January 10, 2015

பாரதியார் பல்கலை: பி.எட்., தொலைநிலை படிப்புக்கு சேர்க்கை
கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2015ம் கல்வியாண்டில் பி.எட் படிப்பில் சேர விரும்புபவர்கள் குறைந்தபட்சம் இரண்டு வருடம் இளங்கலை, முதுகலை அல்லது அரசு/தனியார் பள்ளிகளில் முழுநேர ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கல்வித்தகுதியாக இளங்கலையில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.
பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.500க்கான வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை பாராதியார் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிப்.,28க்குள் விண்ணப்பங்கள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். நுழைவுத்தேர்வு மார்ச் 29ல் நடைபெறுகிறது.
கூடுதல் விவரங்கள் அறிய பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
அஞ்சல் வழி மூலம் பி எட் வகுப்புகள் இனி இருக்காது?
பி.எட்,எம்.எட் ஆகிய படிப்புகளுக்கான காலஅளவு ஒருவருடத்தில் இருந்து இரண்டு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. +2 தேர்ச்சி பெற்றவர்கள் இளங்கலை படிப்புடன் பி.எட் படிப்பையும் சேர்த்து நான்கு ஆண்டுகளுக்கு படிக்ககூடிய வகையில், ஒருங்கிணைந்த பாடத்திட்ட முறையை நடப்பாண்டில் தொடங்க உள்ளதாக, மத்திய பள்ளி கல்வித்துறை செயலகம் தெரிவித்துள்ளது.
பி.எட் பயில்பவர்கள் குறைந்தபட்சம் 20 வாரங்களாவது மாணவர்கள் மத்தியில் வகுப்பறையில் பாடம் எடுக்கவேண்டும் என்று, மத்திய பள்ளிகல்வித்துறை செயலாளர் விர்ந்தா சாரப் தெரிவித்தார். அஞ்சல் வழி மூலம் பி எட் வகுப்புகள் இனி இருக்காது என்று நேற்று புதுடில்லியில் நடைபெற்ற மாநில பள்ளிகல்வித்துறை அமைச்சர்கள் மாநாட்டில் விர்ந்தா தெரிவித்தார்.

Saturday, December 6, 2014

பி.எட்., எம்.எட்., எம்.பில் முடித்த 69,473 பேருக்கு பட்டமளிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 70 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு பட்டம் கவர்னர் கே.ரோசய்யா வழங்கினார்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 70 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை கவர்னர் கே.ரோசய்யா வழங்கினார்.
8 பதக்கம் பெற்ற முதல் மாணவி
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 5-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கவர்னர் கே.ரோசய்யா தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். வேலூர் ஆக்ஸிலியம் ஆசிரியர் கல்வியில் கல்லூரி பி.எட். மாணவி எஸ்.நித்யா 8 பதக் கங்களை பெற்று பல்கலைக்கழக அளவில் முதல் இடம் பெற்றார்.
2-வது இடத்தை மதுரை மங்கையற்கரசி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி சபரிஷா பெற்றார். இவர்கள், பிஎச்.டி. மாணவர்கள் உள்பட 74 பேர் நேரடியாக வந்து பட்டம் பெற்றனர்.
விழாவுக்கு வராமல் விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் 69 ஆயிரத்து 399 மாணவ-மாணவிகளுக்கும் பட்டம் கொடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மொத்தத்தில் 69 ஆயிரத்து 433 பேர் பட்டம் பெற்றனர்.
உயர்கல்வி படிப்போர் சதவீதம் உயர்வு
விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் பேசுகையில் தமிழ்நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு உயர்கல்வி மாணவர் சேர்க்கை 38.2 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார்.
தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.கோவிந்தா கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:-
இன்றைய காலக்கட்டத்தில் ஆசிரியர் பணி சவால் மிகுந்தது. செல்போன், இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால் அவற்றை எளிதில் மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். எனவே ஆசிரியர்கள் வகுப்பு பாடத்துடன் நின்றுவிடாமல் மாணவர்களை அறிவு மிகுந்தவர்களாக ஆக்க வேண்டும். ஆசிரியர்கள் அவ்வப்போது புதிய புதிய தொழில்நுட்பங்களையும், புதிய பாடங்களையும் படித்து தெரிந்து அவற்றை மாணவர்களை கற்கவைக்க வேண்டும். எனவே சவால் மிகுந்த இந்த காலத்தில் திறமையான மாணவர்களை ஆசிரியர்களாக போகும் நீங்கள் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு ஆர்.கோவிந்தா பேசினார்.
வரவேற்பு
விழாவில் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஹேமந்த் குமார் சின்கா, ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடக்கத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் கெ.விஸ்வநாதன் வரவேற்று பேசினார்.
விழா நடைபெறுவதற்கு முன்பாக பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் உள்ள ஒரு மின் விளக்கில் இருந்து மின்சார கசிவு காரணமாக புகை வந்தது. இதனால் பாதுகாப்பு கருதி அரங்கில் உட்கார்ந்திருந்த மாணவ- மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
உடனடியாக தீ அணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் அதை அணைத்தனர். பின்னர் மாணவ-மாணவிகள் அரங்குக்குள் உட்கார அனுமதிக்கப்பட்டனர்

Saturday, August 9, 2014

பி.எட். படிப்புக்கான காலத்தை இரு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், அது ஆய்வில் இருப்பதாகவும் உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் குழு துணைத் தலைவர் பாலபாரதி துணைக் கேள்வி எழுப்பியபோது, தனியார் பி.எட்., கல்லூரிகளில் நியாயமற்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றை முறைப்படுத்த வேண்டும். மேலும், பி.எட். படிப்புக்கான காலத்தை இரண்டு ஆண்டுகளாக நீட்டிக்கப் போவதாகக் கூறப்படுகிறது. அது குறித்தும் விளக்க வேண்டும் என்றார்.
இதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:
பி.எட். படிப்புக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. தற்போது, ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி, அரசு பி.எட். கல்லூரிகளில் ரூ.2,250-ம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும், தனியார் கல்லூரிகளில் ரூ.41,500-ம், தரச்சான்று பெற்ற தனியார் கல்லூரிகளில் ரூ.46 ஆயிரமும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பி.எட். படிப்பின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிப்பது தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது. அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார் அமைச்சர் பழனியப்பன்.

Friday, August 8, 2014

பி.எட்., வகுப்பறை பயிற்சியில் சிக்கல் இடைநிலை ஆசிரியர்கள் அலைக்கழிப்பு.

தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு, பி.எட்., முடிப்பது அவசியம்.பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு, தபால் வழியில் பி.எட்., படிப்பு, அண்ணாமலை பல்கலை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை உள்ளிட்ட பல பல்கலையில் வழங்கப்படுகிறது. இதில் ஆசிரியர் வகுப்பறை பயிற்சியாக, 40 நாள் எடுத்துக்கொள்ள வேண்டும்.பி.எட்., என்பதால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 9, 10ம் வகுப்புகளில் மட்டுமே வகுப்பறை பயிற்சியை எடுத்துக்கொள்ளவேண்டும் என, ஸ்டடி சென்டர்கள் வலியுறுத்துகின்றன. ஆனால், சேலம் மாவட்டத்தில் துவக்கப்பள்ளியில் பணிபுரிந்து வரும், 100க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பி.எட்., படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான வகுப்பறை பயிற்சிஅனுமதிக்கு, தொடக்கக்கல்வி அலுவலகத்தை அணுகியபோது, நடுநிலைப்பள்ளிகளில், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, பாடம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆனால், பல்கலை ஸ்டடி சென்டர்கள் அனைத்தும், 9 மற்றும், 10ம் வகுப்புக்கு பாடம் நடத்தினால் மட்டுமே, பி.எட்., பட்டம் வழங்கப்படும் என, மிரட்டல் விடுக்கின்றனர். இதனால், இருதலைக்கொள்ளி எறும்பாக, இடைநிலை ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:தொடக்கக்கல்வி அலுவலகத்தில், நடுநிலைப்பள்ளிகளில் பயிற்சி எடுப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என, ஸ்டிரிக்டாக கூறிவிட்டனர்.

ஆனால், பல்கலை ஸ்டடி சென்டர்களோ, 9, 10ம் வகுப்புகளில் தான் பயிற்சி எடுக்க வேண்டும் என, கூறுகின்றனர். ஸ்டடி சென்டர்களோ, "தமிழகம் முழுவதும் இதே நிலை' என்கின்றனர். சேலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பிடிவாதமாக இருக்கின்றனர். படிப்பை முடிக்கும் வேலையில், இரு தரப்பினரும் தொடர்ந்து அலைக்கழித்து வருவதால், என்ன செய்வதென தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Sunday, August 3, 2014

6ம் தேதி முதல் 9ம் தேதி வரை
பிஎட் கல்லூரிகளில் சேர ஆன்லைன் கலந்தாய்வு

மதுரை: பிஎட் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் கலந்தாய்வு வரும் 6ம் தேதி துவங்கி, 9ம் தேதி வரை சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார். மதுரையில் அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 21 கல்வியியல் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 169 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. மாநிலத்தின் 20 இடங்களில் ஆன்லைன் வசதி செய்து விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டதில், 10 ஆயிரத்து 500 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு ஒற்றைச்சாளர முறையில் ஆக.6ல் துவங்கி ஆக.9 வரை நெல்லை, மதுரை, சேலம், கோவை, சென்னை ஆகிய இடங்களில் நடத்தப்படும். இக்கலந்தாய்வு முடிந்ததும் எம்எட் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கும்.

அகில இந்திய அளவில் பிஎட், கால அளவை 2 ஆண்டுகளாக நீட்டிப்பதற்கான கருத்து கேட்கப்பட்டது. இது குறித்து எழுத்து பூர்வமான பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-15ம் கல்வியாண்டில் தமிழகத்தில் புதிதாக 15 கல்வியியல் கல்லூரிகள் துவக்க அனுமதிக்கப்படும். அனைவருக்கும் கல்வி கொள்கையில் தரமான கல்வி கொடுக்க வேண்டும். இதற்கு தரமான தகுதியான ஆசிரியர்கள் வேண்டும். இதனடிப்படையில்தான் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தகுதித்தேர்வு குறித்து பிஎட் படிப்பிலும் பயிற்றுவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.
புதிதாக 12 கல்வியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி: துணைவேந்தர் தகவல்

தமிழகத்தில், 2014-15 நடப்புக் கல்வியாண்டில் புதிதாக 12 கல்வியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக, துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது:

ஒவ்வொரு கல்வியாண்டும் கல்லூரிகள் துவங்குவதற்கு முன்னதாக, கல்லூரிகளின் பேராசிரியர்கள், முதல்வர்கள், தாளாளர்கள் போன்றோர்களை ஒருங்கிணைத்து 5 கட்டங்களாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கை எப்படி நடைபெறவேண்டும், கல்வி பயிற்றுவிப்பது எப்படி, பிரச்னைக்கு இடம் தராமல் நிர்வகிப்பது எப்படி, மாணவர்களிடம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும், பெற்றோர்களிடம் நிர்வாகத்தினர் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும், தவிர்க்க முடியாத காரணத்தால் பிரச்னை எழும்போது சமாளிப்பது எப்படி போன்றவை குறித்து பல்கலைக்கழகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக, மாணவர்களுக்கான கல்வி பயிற்றுவித்தலில் புதிய அணுகுமுறைகள் குறித்து விளக்கம் தரப்படும்.

இந்த ஆண்டுக்கு, ஏற்கனவே சென்னை, கோவை ஆகிய இடங்களில் ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்2-ம் தேதி இன்று(நேற்று) மதுரை கேஎல்என் கல்வியியல் கல்லூரியில் மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆகஸ்ட்3-ம் தேதி இன்று நெல்லையிலும், 4-ம்தேதி சேலத்திலும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டங்களில், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்க கூடாது, மாணவர் சேர்க்கையிலும் அரசு உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வலியுறுத்தி கூறப்படுகிறது. இதனால், 2 ஆண்டுகளில் மாநிலத்திலுள்ள 60 சுயநிதிக் கல்லூரிகள் குறித்து எவ்வித புகாரும் வந்ததில்லை.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் 21 கல்வியியல் கல்லூரிகளிலுள்ள 2,169 இடங்களுக்கு விண்ணப்பிக்க 29 இடங்களில் ஆன்லைன் வசதி செய்யப்பட்டது. இதில் 10,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2,169 தகுதியான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஆகஸ்ட் 6-ம் தேதி துவங்கி, 9-ம் தேதி வரை நடைபெறும். ஒற்றைச்சாளர முறையில் நெல்லை, மதுரை, சேலம், கோவை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இக்கலந்தாய்வு முடிந்தவுடன் எம்எட் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கும்.

கல்லூரி, பள்ளிகள் இருக்கும் வரை பிஎட் படிப்புக்கான மவுசு குறையாது. முன்பு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பட்டயப்பயிற்சி முடித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். தற்போது, 1-5-ம் வகுப்பு வரை மட்டுமே ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. 6-ம் வகுப்பு முதல் வாய்ப்பு கொடுக்கப்படுவதால், பிஎட் படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. பல வெளிநாடுகளிலும் தமிழக பிஎட் கல்விப் பாடத்திட்டத்தை பின்பற்றுவதாக தகவல் கிடைத்துள்ளது.

அகில இந்திய அளவில் பிஎட் படிப்புக்கான காலஅளவை 2 ஆண்டுகளாக நீடிப்பது குறித்து கருத்துக் கேட்கப்பட்டது. துணைவேந்தர் என்ற முறையில் எழுத்துப்பூர்வமாக எங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளோம். அதை வெளிப்படையாக கூறஇயலாது.

2014-15 நடப்புக் கல்வியாண்டில் 12 புதிய கல்வியியல் கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதி வழங்கப்படும், என்றார்.

Monday, July 21, 2014

பி.எட் - 'கிரேடு'க்கு இணையான மதிப்பெண் குறிப்பிட வேண்டும் துணைவேந்தர் தகவல் - தினமலர்பி.எட் - 'கிரேடு'க்கு இணையான மதிப்பெண் குறிப்பிட வேண்டும் துணைவேந்தர் தகவல் - தினமலர்

மதுரை:"பி.எட்., படிப்பிற்கு 'ஆன்--லைனில்' விண்ணப்பிக்கும் போது, 'கிரேடிங்' முறையிலுள்ள மாணவர்கள், சம்மந்தப்பட்ட பல்கலையில் அதற்கான உரிய மதிப்பெண் பெற்று குறிப்பிட வேண்டும்," என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: அரசு மற்றும் உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை 'கவுன்சிலிங்' மூலம் நடக்கவுள்ளது.

இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். முதல் முறையாக இந்தாண்டு ஆன்-லைனில் விண்ணப்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம். இதற்காக மாநிலம் முழுவதும் 29 ஒருங்கிணைப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மதுரையில் ஜஸ்டின், சிவகங்கையில் அழகப்பா கல்வியியல் கல்லுாரி, துாத்துக்குடி வ.உ.சி.,, நெல்லை செயின்ட் இக்னீசியஸ் கல்வியியல் கல்லுாரிகளின் மையங்களில் விண்ணப்பிக்கலாம். 'கிரேடு' முறையில் உள்ள மாணவர்கள், சம்மந்தப்பட்ட பல்கலையில் இருந்து உரிய மதிப்பெண் பெற்று, விண்ணப்பத்தில் குறிப்பிட்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும், என்றார்

Thursday, July 17, 2014

பி.எட். படிப்பில் சேர 19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்பி.எட். படிப்பில் சேர 19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பி.எட். படிப்பில் சேர 19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றுதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகள் 21 உள்ளன. 649 சுயநிதி பி.எட். கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 21 கல்லூரிகளில் 2 ஆயிரத்து400 பி.எட். இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு மட்டும் ஒற்றைச் சாளற முறையில் கலந்தாய்வு நடத்தி மாணவ–மாணவிகளை சேர்க்க உள்ளோம். இந்த கலந்தாய்வு முதல் முதலாக பல்கலைக்கழகம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.பி.எட். படிக்க விரும்பும் மாணவ–மாணவிகள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 19–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் 29 மையங்கள்ஏற்படுத்தப்பட்டுள்ளன.சென்னையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 3 மையங்கள் ஏற்படுத்தி அவற்றில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம்ஆகிய மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதுபோல தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தர்மபுரியில் உள்ள மையத்தில் விண்ணப்பிக்கலாம். மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மையத்தை நாடலாம்.இது பற்றிய முழுவிவரமும் இணையதளத்தில் (www.onlinetn.com) தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் 19–ந்தேதி தான் செயல்படத் தொடங்கும். அன்று விவரங்களை அறிந்து கொள்ளலாம். 28–ந்தேதி கடைசி நாள் விண்ணப்பிக்க மாணவ–மாணவிகள் அந்த மையங்களுக்கு செல்லும்போது, புகைப்படம் வைத்திருந்தால் கொண்டு செல்லுங்கள். இல்லையென்றால் உங்களை அதிகாரிகளே புகைப்படம் எடுப்பார்கள்.விண்ணப்பிக்க அத்தனை உதவிகளையும் செய்வார்கள். தப்பாக விண்ணப்பிக்க முடியாத அளவுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்துள்ளோம். எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த 29 பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு ரசீது கொடுக்கப்படும்.

விண்ணப்பிக்க 28–ந்தேதி கடைசி நாள்.பல்கலைக்கழக இணைய தள முகவரி www.tntue.in கலந்தாய்வு 28–ந்தேதிக்கு பிறகு 3 அல்லது 4 நாட்கள் கழித்து ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். பாடம் வாரியாக வெளியிடப்பட உள்ளது. பின்னர் ரேங்க் மற்றும் கலந்தாய்வு தேதி அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் எஸ்.எம்.எஸ்.மூலம் அனுப்பப்படும். செல்போன் மற்றும் பி.எஸ்.என்.எல். தரைவழி (லேண்ட் லைன்) தொலைபேசி மூலமும் பேசி தெரிவிக்கப்படும். எம்.எட். படிப்பில் சேர விண்ணப்பிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார். பேட்டியின் போது பல்கலைக்கழக பதிவாளர் கலைச்செல்வன் உடன் இருந்தார்.
பி.எட்., எம்.எட். படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க புதிய வசதி.

பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 29ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு மற்றும்அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. 

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்தும் இந்த கலந்தாய்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர முறையில் நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் கலந்து கொள்ள இந்தாண்டு முதல் இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 29 இடங்களில் ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்படும். இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருப்பார்கள். அவர்களிடம் தகுந்த ஆவணங்களைக் கொடுத்து கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை 19-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாள்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஒருங்கிணைப்பு மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தவுடன், மாணவர்களுக்கு ஒரு நகல் தரப்படும். இதனை மாணவர்கள் வைத்துக் கொள்ளவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 300 வசூலிக்கப்படும்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களிடம் ரூ. 175 கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ஒருங்கிணைப்பு மையத்தின் சேவை கட்டணமாக ரூ. 50 செலுத்தவேண்டும் என்றார் துணை வேந்தர்.ஒருங்கிணைப்பு மையங்கள் எவை? சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள்:தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை., ஐ.ஏ.எஸ்.இ., சைதாப்பேட்டை, ஸ்டெல்லா மடிடூனா கல்வியியல் கல்லூரி காஞ்சிபுரம்.

Wednesday, July 9, 2014

பாரதியார் பல்கலை.எம்.எட். நுழைவுத் தேர்வு தேதி மாற்றம்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்விக் கூடத்தின் எம்.எட். நுழைவுத்தேர்வு தேதி ஜூலை 27-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்விக் கூடத்தின் எம்.எட். படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜூலை 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறுவதாக இருந்தது. அதேநாளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வும் நடைபெற உள்ளது. எனவே, நுழைவுத்தேர்வை வேறு தேதியில் வைக்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்களிடம் வேண்டுகோள் வந்தது.

அதையேற்று, நுழைவுத்தேர்வு தேதி 20- ஆம் தேதிக்குப் பதிலாக 27-ஆம் தேதி நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, பாரதியார் பல்கலைக்கழகத்தின் http://www.b-u.ac.in/இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
இரண்டாண்டு படிப்பாகிறது பி.எட்.,ஓராண்டு படிப்பு முடிவதால் மவுசு

கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.,) அடுத்த ஆண்டு முதல், இரண்டாண்டு படிப்பாக மாற்றப்படுவது உறுதியாகி உள்ளதால், நடப்பாண்டு, பி.எட்., படிப்பிற்கு கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் படிப்புகளில் ஒன்றான, பி.எட்., பட்டப்படிப்பு, ஓராண்டு படிப்பாக இருந்து வருகிறது.
மத்திய அரசால், பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் திறன், கல்வியால் பெற்ற அவர்களின் அறிவுத்திறன் ஆகியவை, நுண்ணிய ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், தமிழக மாணவர்களின் அறிவுத்திறன் மிக குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.எனவே, கல்வி கற்பித்துத் தரும் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதற்காக, பி.எட்., படிப்பை, அடுத்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டு படிப்பாக மாற்ற திட்டமிடப்பட்டது.

இதற்கான, சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த கல்வியாண்டு முதல், இது நடைமுறைப் படுத்தப்படுவது உறுதியாகி உள்ளது.இதனால், இந்த கல்வியாண்டு மட்டும் தான், ஓராண்டு கொண்ட பி.எட்., படிப்பு நடைமுறையில் இருக்கும். படிப்பு செலவினங்கள், கால விரயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பி.எட்., படிப்பிற்கு, இந்த கல்வியாண்டில், கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக, வெறிச்சோடிய பல கல்வியியல் கல்லுாரிகளிலும், தற்போது மாணவ, மாணவியரின் கூட்டம் அலை மோதுகிறது

Saturday, July 5, 2014

TNOU:தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை :2015 -B.Ed., தொலைதூர கல்வி சேர்க்கை அறிவிப்பு.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜனவரி முதல் ஆரம்பமாக உள்ள தொலைதூர கல்வி பி.எட். படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிப்பவர் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் முழு நேரபணியிலுள்ள இரண்டு வருட ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட் படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதல் தகவல்களுக்கு www.tnou.ac.in என்ற 2015.இணையதளத்தை அணுகலாம்.

Wednesday, July 2, 2014

M.Ed: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில் M.Ed படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தை தொடர்ந்து, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில் எம்.எட். படிப்பை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. 
பி.எட். முடித்துவிட்டு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஆசிரியராக 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்கள் பாரதிதாசன் பல்கலைக் கழகத் தொலைதூரக்கல்வி மையம் மற்றும் அதன் கல்வி மையங்களில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பக் கட்டணம் ரூ.500. இதை டிமாண்ட் டிராப்டாகச் செலுத்த வேண்டும். பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தின் இணையத்தில் (www.bdu.ac.in/cde) விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். விண்ணப்பம் மற்றும் கல்வி மையங்களின் விவரங்களை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஜூலை 25-ம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 24-ந் தேதி நடத்தப்படும் என்று பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி மைய இயக்குநர் கே.ஆனந்தன் அறிவித்துள்ளார்.

Sunday, June 29, 2014

Wednesday, June 11, 2014

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் திங்கள்கிழமை (ஜூன் 9) முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2015 ஆம் ஆண்டுக்கான பி.எட். படிப்பிற்கு விண்ணப்பங்கள் ஜூன் 9 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ் வழி படிப்பிற்கு 500 இடங்கள், ஆங்கில வழி படிப்பிற்கு 500 இடங்கள் என மொத்தம் 1,000 இடங்கள் உள்ளன.
விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 14 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள், பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு மையங்களான, அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரி சென்னை, எஸ்.டி. இந்து கல்லூரி நாகர்கோவில், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி வேலூர், மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி விழுப்புரம் ஆகியவற்றில் விநியோகம் செய்யப்படுகின்றன.
மேலும், மண்டல மையங்களான, எஸ்.என்.ஆர். கல்லூரி கோவை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம் மதுரை, வருவான் வடிவேலன் பி.எட். கல்லூரி தருமபுரி, ஷிவானி பொறியியல் கல்லூரி திருச்சி, புனித கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரி சென்னை, டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரி கோவை, இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி தஞ்சாவூர், கிரசன்ட் கல்வியியல் கல்லூரி திருவண்ணாமலை, கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரி மசக்காளிபட்டி, ராசிபுரம் கல்வியியல் கல்லூரி ராசிபுரம், கபி கல்வியியல் கல்லூரி மதுரை, பவானி கல்வியியல் கல்லூரி கடலூர் ஆகிய கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக ரூ. 500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ரூ.500க்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும். தபால் மூலம் விண்ணப்பத்தை பெற, ரூ.550 க்கான வரைவோலையை "தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை 15' என்ற பெயரில் சென்னையில் மாற்றத் தக்கதாக எடுத்து, "பதிவாளர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், 577, அண்ணா சாலை, சென்னை 600015' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் முதல் தொடங்கும். பின்னர் பி.எட். வகுப்புகள் 2015 ஜனவரியில் தொடங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04424306657 மற்றும் 04424306658 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.