Thursday, December 31, 2015

B.Ed(Distance Mode) at Sastra University, Thanjavur -

Applications are invited for admission to B.Ed (Distance Mode) at Sastra University, Directorate of Distance Education, Thanjavur

Wednesday, November 4, 2015

பி.எட்., படிப்பில் புதிய மாற்றம் தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகம்


பி.எட்., படிப்பில், புதிய பாடத்திட்டம் அமலாகியுள்ள நிலையில், சி.சி.இ., எனப்படும், தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவுப்படி, நாடு முழுவதும் பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை அறிமுகமாகிஉள்ளது.இந்த முறைப்படி, பி.எட்., படிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கும் தேர்வுக்கான மதிப்பெண் மட்டுமின்றி, சி.சி.இ., முறையில், 30 மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படுகிறது. மாணவர்களின் கற்றல் திறன், வகுப்புகளில் ஆர்வமாக பங்கேற்றல், செய்முறைப் பயிற்சியில் ஈடுபாடு, கற்றல் பயிற்சிக்கான திட்ட வரைவு தயாரித்தலில் ஆர்வம் மற்றும் புதுமை என, மாணவர்களின் செயல்திறன்கள் அடிப்படையில்,சி.சி.இ., மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது.யோகா உள்ளிட்ட உடல்நலம் குறித்த பாடங்களுக்கும் தனியாக மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன. பி.எட்., மாணவர்கள், முதலாம் ஆண்டில், 20; இரண்டாம் ஆண்டில், 80 என, மொத்தம், 100 நாட்கள், பள்ளிகளுக்கு சென்று பாடம் நடத்தும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர் போல், 'பவர் பாயின்ட் பிரசன்டேஷன்' மூலம், கருத்தரங்கம் நடத்தி, பயிற்சித் திறமையை வெளிப்படுத்த வேண்டும். இதுபோன்று புதிய முறைகளுடன் படித்து, நல்ல கல்வித் தரத்துடன் பி.எட்., முடிக்க உள்ள பட்டதாரிகள், இனிமேல் நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்று, எளிதாக தேர்ச்சி அடைய வாய்ப்புள்ளதாகவும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்படும் என்றும் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.மாநிலப் பள்ளிகளில், 8ம் வகுப்பு வரையிலும்; மத்திய இடைநிலைக் கல்வி வாரிய, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு வரையிலும், கடந்த 2010ம் ஆண்டு முதல், சி.சி.இ., முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், ஆசிரியர் படிப்புக்கும், சி.சி.இ., மதிப்பெண் திட்டம் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.-

Saturday, October 31, 2015

திறந்தநிலை பல்கலையில் பி.எட்., மாணவர் சேர்க்கை


தொலைநிலையில், பி.எட்., படிக்க விரும்புவோர், நவ., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த பல்கலையில், தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதியுடன், இரண்டு ஆண்டு தொலைநிலை பி.எட்., படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப வினியோகம், 14ல் துவங்கியது.
ஆசிரியர்களாக பணிபுரிவோர் மற்றும் இளநிலை பட்டம் பெற்றவர்கள் இதில் சேரலாம். மொத்தம், 1,000 பேர் சேர்க்கப்படுவர். இதற்கு, நவ., 30க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என,பல்கலை அறிவித்துள்ளது. 'கலந்தாய்வு டிசம்பரில் நடக்கும்; ஜனவரி முதல், வகுப்புகள் துவங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tuesday, September 29, 2015

பி.எட்., கல்வி கட்டணம் உயர்கிறது


தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் உள்ள 7 அரசு பிஎட் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் பிஎட் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்களுக்கு 8,005 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இவர்களுக்கான கலந்தாய்வை உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், லேடி வெலிங்டன் கல்லூரியில் பேசியதாவது: பிஎட் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கி 5ம் தேதி வரை நடைபெறுகிறது. 2011ம் ஆண்டு 18 சதவீதமாக உயர்கல்வி மாணவர் சேர்க்கை வீதம் தற்போது 48 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்காக காரப்பாக்கத்தில் ரூ.38 கோடியில் புதிய கட்டிடம் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டப்படும். அரசு பிஎட் கல்லூரிகளில் தற்போது கல்வி கட்டணம் ரூ.2 ஆயிரமாகவும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமாகவும், சுயநிதி கல்லூரிகளில் 41 ஆயிரத்து 500கவும் உள்ளது. 2 ஆண்டுகளுக்கான கல்விகட்டணம் நிர்ணயம் செய்ய உயர்கல்வி கட்டண நிர்ணய குழுவான பாலசுப்பிரமணியன் கமிட்டியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் புதிய கட்டணம் குறித்து அறிவிப்பு வெளியிடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Saturday, September 26, 2015

பி.எட்., எம்.எட். துணைத் தேர்வு: பல்கலைக்கழகம் அறிவிப்பு


ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளான பி.எட்., எம்.எட். ஆகியவற்றுக்கான டிசம்பர் மாத துணைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வருகிற டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ள பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான துணைத் தேர்வுக்கான விண்ணப்பத்தைwww.tnteu.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக் கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ. 200 வீதமும், செய்முறைத் தேர்வுக்கு ரூ. 600 என்ற அளவிலும் கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தை "பதிவாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை' என்ற பெயரில் எடுக்கப்பட்ட வரைவோலையாக செலுத்த வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க அக்டோபர் 26 கடைசித் தேதியாகும். கடைசித் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் அபராதத் தொகை ரூ. 150 சேர்த்து நவம்பர் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Wednesday, September 16, 2015

பி.எட்., படிக்க ஐந்தே ரூபாய்!


தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிக்க, தமிழக அரசு, ஐந்து ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.தமிழகத்தில், 705 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., படிப்புகள் உள்ளன.
மொத்தம் உள்ள, 1,777 இடங்களுக்கு, 7,400 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். வரும், 28ம் தேதி, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கி, அக்., 5ம் தேதி முடிகிறது.பி.எட்., கல்லுாரிகளில், முதலாம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை, தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.
இதன்படி, முதலாம் ஆண்டு மாணவர்கள், கல்விக் கட்டணமாக, 2,070 ரூபாய் செலுத்த வேண்டும். தலித், பழங்குடியினர் மற்றும் அருந்ததி இன மாணவர்களுக்கு, கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ஆண்டுக்கு, ஐந்து ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.மற்ற கட்டணங்களை, தமிழக உயர்கல்வித் துறையின் உதவித்தொகை மூலம், கல்வி நிறுவனங்களே சரிசெய்து கொள்ளும். தனியார் சுயநிதி கல்லுாரிகளில், இந்தப் படிப்புக்கு, ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய் முதல், 80 ஆயிரம் ரூபாய் வரை,கட்டணம் வசூலிக்கின்றனர்.

பி.எட்., தரவரிசை பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு


அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கான தரவரிசைப் பட்டியல், வரும் 18ம் தேதி வெளியிடப்படுகிறது.தமிழகத்தில், ஏழு அரசு மற்றும் 14 அரசு உதவி கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும் 28ம் தேதி நடக்கிறது.
அரசு சார்பில், லேடி வெலிங்டன் கல்லுாரி, மாணவர் சேர்க்கையை நடத்துகிறது.மொத்தமுள்ள, 1,800 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 7,500 பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. மதிப்பெண்ணுக்கு ஏற்ப, 'வெயிட்டேஜ்' முறையில், தரம் நிர்ணயிக்கப்படுகிறது. தரவரிசை பட்டியல், 18ம் தேதி வெளியிடப்படும் என, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்

Saturday, September 12, 2015

தமிழகத்திலும் பி.எட். படிப்புக்கு இரண்டு ஆண்டுகள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தமிழகத்திலும் பி.எட், எம்.எட். ஆசிரியர் கல்விப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை தமிழக அரசு இறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் பி.எட். படிப்புக்கு இந்தக் கல்வியாண்டு (2015-16) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடத்தப்பட உள்ளது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய (2014) வழிகாட்டுதல்படி, பி.எட், எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் இந்தக் கல்வியாண்டு (2015-16) முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.
இதை, பிற மாநிலங்கள் அனைத்தும் ஏற்று நடைமுறைப்படுத்திய நிலையில், தமிழகம் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தது. தமிழகத்திலுள்ள சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கம் இந்தப் புதிய வழிகாட்டுதலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் நிகழாண்டில் பி.எட். படிப்புக் காலம் ஓராண்டா, இரண்டு ஆண்டுகளா என்ற குழப்பம் நீடித்து வந்தது. மேலும், இந்தப் படிப்பில் நிகழாண்டு மாணவர் சேர்க்கையும் தாமதமாகி வந்தது.
இதனிடையே, மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோதும், மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டது. இந்த நிலையில், பி.எட், எம்.எட். படிப்புக் காலம் நிகழாண்டில் தமிழகத்திலும் இரண்டு ஆண்டுகள்தான் என்பதை தமிழக அரசு இறுதி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இதுகுறித்து விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன முதல்வரும், பி.எட். மாணவர் சேர்க்கை செயலருமான ஆர்.பாரதி கூறியது:
என்.சி.டி.இ. வழிகாட்டுதலின் படி, தமிழகத்திலும் நிகழாண்டு முதல் பி.எட். படிப்புக் காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து, உத்தரவிட்டுள்ளது. எனவே, நிகழாண்டில் பி.எட், எம்.எட். படிப்புகளில் சேரும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் படித்தாக வேண்டும்.
மேலும், பி.எட். படிப்புக்கான கலந்தாய்வு வரும் 28-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முதல் நாளில் காலையில் மாற்றுத் திறனாளிகளுக்கும், மதியம் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.
செப்டம்பர் 29-ஆம் தேதி கணிதப் பாடப் பிரிவினருக்கும், 30-ஆம் தேதி இயற்பியல், வேதியியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.
அக்டோபர் 1-ஆம் தேதி தாவரவியல், விலங்கியல் பிரிவினருக்கும், 3-ஆம் தேதி தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவினருக்கும், 5-ஆம் தேதி காலையில் வரலாறு, புவியியல் வணிகவியல் பிரிவினருக்கும், மதியத்தில் பொருளாதாரம், மனை அறிவியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.
இதுதொடர்பான அறிவிப்பு கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார்.

Saturday, August 29, 2015

பி.இ., பட்டதாரிகள் பி.எட்., படிக்க அனுமதி - ஆசிரியர் பணி யாருக்கு?


பி.எட்., படிப்பில், இன்ஜினியரிங் படித்தவர்களும் சேர, இந்த ஆண்டு முதல், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதனால், கலை, அறிவியல் பட்ட தாரிகளிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பி.இ., முடித்தவர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மாணவர் சேர்க்கை:
பி.எட்., படிப்பில் புதிய விதிமுறைகள் தொடர்பான குழப்பத்தால், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஒரு மாதம் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எட்., படிப்பு எத்தனை ஆண்டு என்ற குழப்பம் தீர்க்கப்படாமலேயே, மாணவர் சேர்க்கை பணி துவங்கியுள்ளது. மத்திய அரசு அளித்த புதிய விதிமுறைகளையும், தமிழக அரசு எந்த திருத்தமும் இன்றி, அப்படியே வெளியிட்டு உள்ளது.இதன்படி, பி.இ., - பி.டெக்., போன்ற இன்ஜி., முடித்தவர்களும், பி.எட்., படிப்பில் சேரலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பொதுவாக, பி.எஸ்சி., - எம்.எஸ்சி., - பி.ஏ., -எம்.ஏ., போன்ற பட்டப்படிப்புகளில், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், பொருளியல் மற்றும் மொழிப் பாடங்களில், அதாவது, பள்ளிகளில் பிளஸ் 2 வரை, அமலில் உள்ள பாடப்பிரிவுகளை படித்தால் மட்டுமே, அவர்களை, பி.எட்., படிப்பில் சேர்ப்பது வழக்கம். பி.எட்., முடித்த பின், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஆசிரியராக பணி வாய்ப்பு பெறுவர்.
அதுவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களே, ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். ஆனால், பி.இ., - பி.டெக்., முடித்தால், அவர்கள் படிக்கும் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் போன்ற பாடப்பிரிவுகள், பள்ளிகளில் கிடையாது. எனவே, அவர்களை எப்படி ஆசிரியர் பணியில் சேர்க்க முடியும். அதற்கு ஏற்றார் போல் பாடத்திட்டம் மாறுமா; எப்போது மாற்றப்படும். பணி நியமன விதிகளில் மாற்றம் வருமா என, பல கேள்விகள் எழுந்துள்ளன.
புது நடைமுறை வேண்டாம்:
இதுகுறித்து, தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் கூறும்போது, ''இது குளறுபடியான அறிவிப்பு. பி.இ., - பி.டெக்., படிப்புக்கும், பள்ளிப்படிக்கும் இணை வைக்க முடியாது.''அப்படி வைப்பதாக இருந்தால், அந்த பாடப்பிரிவுகள் தனியாக பள்ளிகளில் துவங்கப்பட வேண்டும். எனவே, புதிய நடைமுறை தேவையற்ற பிரச்னைகளையும், குழப்பத்தையுமே உருவாக்கும்,'' என்றார்.
மாணவர் சேர்க்கையில் எஸ்.எம்.எஸ்., வசதி:
இந்த ஆண்டு பி.எட்., படிப்புக்கு மட்டுமே, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. எம்.எட்., படிப்புக்கு அந்தந்த கல்லுாரிகளே மாணவர்களை சேர்த்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பரிசீலனைக்கு பின், தேர்வானவர்கள் கலந்தாய்வுக்கு வர, இந்த ஆண்டு முதல் முறையாக, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட உள்ளது.

Friday, August 28, 2015

பி.எட். கலந்தாய்வு: செப்.3 முதல் விண்ணப்ப விநியோகம்?


'தமிழகத்திலுள்ள, 690 பி.எட்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 3ம் தேதி முதல் வழங்கப்படும்' என, தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது.
தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690 கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, கல்லுாரி கல்வி இயக்ககம் நேற்று அறிவித்தது. இதன்படி, நடப்பு கல்வி ஆண்டுக்கான, பி.எட்., படிப்பில், ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும், 3ம் தேதி முதல், 10ம் தேதி வரை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விவரங்களை, http://www.ladywillingdoniase.com/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Wednesday, August 5, 2015

தொலைதூரக்கல்வியில் பிஎட் படிப்பில் சேர இடைநிலை ஆசிரியர் பயிற்சிஅவசியம் !!


தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பி.எட். மாணவர் சேர்க்கையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே இனி தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர முடியும்.
என்சிடிஇ எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அமைப்பு, ஆசிரியர் கல்வி பயிற்சியில் பல் வேறு மாற்றங்களை கொண்டுவந் துள்ளது. பிஎட், எம்எட் படிப்புக் காலத்தை ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து 2015-16-ம் கல்வி ஆண்டு முதல் பிஎட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பிஎட் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் என்சிடிஇ-யின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பிஎட் மாணவர் சேர்க்கையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மதுரை காமராஜர், திருச்சி பாரதிதாசன், நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார். கோவை பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் தொலைதூரக்கல்வியில் பி.எட். படிப்பை வழங்கி வருகின்றன. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 2 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவத் துடன் பணியில் இருக்கின்ற பட்டதாரிகள் இதில் சேரலாம். பல்கலைக்கழகத்துக்கு ஏற்ப நுழைவுத்தேர்வு அல்லது பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண் மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
என்சிடிஇ-யின் புதிய விதிமுறை யின்படி, தொலைதூரக்கல்வியில் பிஎட் படிப்பில் சேர இடைநிலை ஆசிரியர் பயிற்சி (ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு) அவ சியம். அத்துடன் பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும். என்சிடிஇ- யின் இந்த புதிய விதிமுறை யின்படிதான் அடுத்த ஆண்டு தொலைதூரக்கல்வி பி.எட். படிப் பில் மாணவர்களைச் சேர்க்க முடிவுசெய்திருப்பதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்லைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியை சந்திரகாந்தா ஜெயபாலன் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

Friday, July 24, 2015

கல்வியியல் பல்கலைக்கு இடைக்கால கமிட்டி அமைப்பு

கல்வியியல் பல்கலைக்கு இடைக்கால கமிட்டி அமைப்பு
ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் ஓய்வு பெற்றதை அடுத்து, பல்கலை பணிகளை கவனிக்க, உயர்கல்வித்துறை முதன்மை செயலர் தலைமையில், மூன்று பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பி.எட்., - எம்.எட்., - எம்.பில்., படிப்புகளை நடத்தும், 690 ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.இந்த பல்கலையின் துணைவேந்தராக இருந்த விஸ்வநாதன், 22ம் தேதியுடன் ஓய்வுபெற்றார். இவர், 2012 முதல் துணைவேந்தராக பணியாற்றியவர். பி.எட்., படிப்பில், 10 புதிய பாடப்பிரிவுகளைக் கொண்டு வந்தார்.
எம்.பில்., மற்றும் பி.எச்டி., ஆராய்ச்சிப் படிப்புகளையும் அறிமுகப்படுத்தினார்.பி.எட்., படிப்பில் ஒற்றைச் சாளர கவுன்சிலிங், 'ஆன்-லைன்' வருகைப்பதிவேடு, பல்கலை வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் போன்றபல திட்டங்களை அமல்படுத்தினார்.அவர் ஓய்வுபெற்ற நிலையில், பல்கலையின் பணிகளை கவனிக்க, மூன்று பேர் அடங்கிய இடைக்காலக் கமிட்டியை அரசு அமைத்துள்ளது. தமிழகஉயர் கல்வி முதன்மைச் செயலர் அபூர்வா, கல்லூரி கல்வி இயக்குனர் தேவதாஸ் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் கோவிந்தன் ஆகியோர் கமிட்டி யில் இடம் பெற்றுள்ளனர்.'இன்னும், மூன்று மாதங்களில், பல்கலைக்கு புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்படுவார்' என, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன

Saturday, July 18, 2015

பி.எட். கலந்தாய்வு: மீண்டும் லேடி விலிங்டன் கல்லூரியே நடத்துகிறது; எம்.மார்க் நெல்சன்


ஆசிரியர் கல்வியியல் கல்வி (பி.எட்.) மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மீண்டும் சென்னை லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனமே நிகழாண்டில் நடத்த உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.அரசு கல்வியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.எட். இடங்கள், சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சார்பில் ஒப்படைக்கப்படும் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை, பல ஆண்டுகளாக சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வந்தது.
கடந்த 2014-15 கல்வியாண்டில் இந்தக் கலந்தாய்வு நடத்தும் பொறுப்பு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. முதன்முறையாக கலந்தாய்வை நடத்திய பல்கலைக்கழகம், புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்தது.அதாவது, சென்னையில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த பி.எட். கலந்தாய்வை, இணையவழி மூலம் சென்னை, கோவை, சேலம், மதுரை ஆகிய நான்கு இடங்களில் நடத்தியது. அது மாணவர்களிடையேயும், பெற்றோரிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றபோதும், பி.எட். சேர்க்கை தொடர்பாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.
இந்த நிலையில், நிகழாண்டில் (2015-16) பி.எட். கலந்தாய்வு நடத்தும் பொறுப்பு மீண்டும் லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.இதுகுறித்து பல்கலைக்கழக உயரதிகாரி ஒருவர் கூறியது:
பி.எட். சேர்க்கை தொடர்பான அரசு உத்தரவு கடந்த வாரம் வழங்கப்பட்டது. அதில் கலந்தாய்வு ஒருங்கிணைப்பு அதிகாரியாக (நோடல்) விலிங்டன் சீமாட்டி கல்லூரி முதல்வர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.எனவே, நிகழாண்டில் கலந்தாய்வை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்த முடியாது. அந்தக் கல்லூரிதான் நடத்தும் என்றார்.

பி.எட். சேர்க்கை நடைமுறைகள் வெளியீடு: பயன்பாட்டு வேதியியல் பட்டமும் சேர்ப்பு


நிகழ் கல்வியாண்டுக்கான ( 2015-16) பி.எட். சேர்க்கை நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பயன்பாட்டு வேதியியல் (அப்ளைடு கெமிஸ்ட்ரி) துறையில் இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களும் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணையதளத்தில் இந்த நடைமுறைகள் இடம் பெற்றுள்ளன.
கணிதம், பயன்பாட்டு கணிதம், இயற்பியல், பயன்பாட்டு இயற்பியல், புவி இயற்பியல், உயரி இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், பயன்பாட்டு வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரித் தொழில்நுட்பம், தாவர உயிரியல், தாவர உயிரித் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அறிவியல், நுண் உயிரியல், வரலாறு, புவியியல், பயன்பாட்டு புவியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அப்ளிகேஷன்ஸ் உள்ளிட்ட துறைகளில் இளநிலை பட்டங்களை முடித்தவர்கள் பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

ஓ.சி. பிரிவினர் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணும், பி.சி, பி.சி.எம். பிரிவினர் குறைந்தபட்சம் 45 சதவீதமும், எம்.பி.சி. பிரிவினர் 43 சதவீதமும், எஸ்.சி, எஸ்.டி, எஸ்சிஏ பிரிவினர் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருப்பது அவசியம்.
பொருளாதாரம், வணிகவியல், மனை அறிவியல், அரசியல் அறிவியல், சமூகவியல், உளவியல், தத்துவவியல், இந்திய கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களும் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம். இதுவரை ஓராண்டாக இருந்துவந்த பி.எட். படிப்புக் காலம், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) வழிகாட்டுதலின்படி இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

பி.எட்., மாணவர் சேர்க்கை விதிமுறைகள் அறிவிப்பு


இந்த ஆண்டு, பி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தர வரிசை பட்டியலில், உயர் படிப்புக்கு ஏற்ற, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.கடந்த ஆண்டு வரை, பி.எட்., ஓராண்டு படிப்பாக இருந்தது. மத்திய அரசின் புதிய விதிமுறைகளின்படி, இந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
இம்மாத இறுதியில், பி.எட்., மாணவர் சேர்க்கையைத் துவங்க, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை முடிவு செய்துள்ளது. அதற்காக, புதிய விதிமுறைகளை, தமிழக கல்லுாரி கல்வி இயக்ககம் வெளியிட்டு உள்ளது. அதன் விபரம்:
* பி.எட்., படிப்பில் சேர, ஏதாவது ஒரு இளங்கலை படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
*எம்.பில்., - பிஎச்.டி., மற்றும் முதுகலை படிப்பு படித்தவர்களும், சேர முடியும்.
* இளங்கலை படிப்பில், முன்னேறிய வகுப்பினர், 50; பிற்படுத்தப்பட்டோர், 45; மிகவும் பிற்படுத்தப்பட்டோர், 43; தலித் மற்றும் அருந்ததியர், 40 சதவீத மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரரின் மதிப்பெண்களுக்கு ஏற்ப, தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். முதுகலை, 4; எம்.பில்., 5; பிஎச்.டி., 6 என 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும்.
* மேலும், 19 வகையான, 'ஆப்ஷனல்' பாடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* பி.எட்., மாணவர் சேர்க்கை, சென்னையில் உள்ள, லேடி வெலிங்டன் ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில் நடக்கும்.மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் தேதி மற்றும் கவுன்சிலிங் குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

Wednesday, June 24, 2015

இரண்டாண்டு பி.பி.எட்., படிப்பில் யோகா, கராத்தே


பி.பி.எட்., எனப்படும் உடற்கல்வியியல் இரண்டு ஆண்டு படிப்பில் புதிதாக யோகா, கராத்தே, ஜூடோ உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பி.எட்., மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக எம்.எட்., படிக்க வேண்டும். யு.ஜி.சி., ம ற்றும் தேசிய கல்வியியல் ஆசிரியர் பயிற்சி பல்கலை (என்.சி.டி.இ.,) இணைந்து பி.எட்., படிப்புக்கு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.
அதன்படி, பி.எட்., எம்.எட்., படிப்புக்காலம் இனி இரண்டு ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் பி.எட்., படிப்புக்கு 723 கல்லுாரிகள், உடற்கல்வியியல் படிப்பான 'பி.பி.எட்.,' படிப்புக்கு 19 கல்லுாரிகள், எம்.எட்.,க்கு 140 கல்லுாரிகள் அனுமதி பெற்றுள்ளன. இதற்கான பாடத்திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. காரைக்குடி அழகப்பா பல்கலை கட்டுப்பாட்டில்
உள்ள உடற்கல்வியியல், கல்வியியல் கல்லுாரிகள் இரண்டு ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற்றுள்ளன. உடற்கல்வியியல் கல்லுாரியில் பி.பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 15. ஒரு யூனிட்டுக்கு 50 மாணவர்கள் வீதம், 2 யூனிட் மாணவர்கள் முதலாண்டில் சேர்க்கப்பட உள்ளனர். இதே போல் 40 இடங்கள் உள்ள, எம்.பி.எட்., படிப்புக்குக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நேர்முகத்தேர்வு வரும் 24-ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
இப்படிப்பில்,கால்பந்து, கையுந்துபந்து, கைப்பந்து, ஹாக்கி, வளைகோல், கூடைப்பந்து, தடகளம் ஆகிய விளையாட்டு மட்டும்முன்பு செய்முறை பயிற்சியாக இருந்தது. கூடுதலாக யோகா, கராத்தே, ஜூடோ, சிலம்பம், மலையேறுதல் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தவும் கூறப்பட்டுள்ளது.

Tuesday, May 26, 2015

பி.எட்., எம்.எட். படிப்பு நாடு முழுவதும் இனி இரண்டு ஆண்டுகளாக அமல்: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர்

நாடு முழுவதும் பி.எட், எம்.எட். படிப்புகள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்பட்டு, நிகழாண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுவதாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பண்டா திங்கள்கிழமை கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இந்தியா முழுவதும் கல்வியியல் படிப்பு என்ற பி.எட் படிப்பையும், முதுநிலை கல்வியியல் படிப்பான எம்.எட் படிப்பையும் இரண்டாண்டு படிப்பாக மாற்றியமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதையடுத்து ஆசிரியர் கல்வி கவுன்சில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், கல்வித்துறைச் செயலர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்தது. அப்போது பி.எட், எம்.எட் படிப்புகளை இரண்டாண்டு கால அளவு கொண்டதாக மாற்றி முடிவெடுக்கப்பட்டது.நாடு முழுவதும் இரண்டாண்டு பி.எட், எம்.எட் படிப்பு நிகழ் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. ஒரு சில மாநிலங்களில் நிகழாண்டு மட்டும் பி.எட், எம்.எட் படிப்பு ஓராண்டாக இருக்கும் என்ற தவறான தகவல் பரவுகிறது. அது உண்மையல்ல. அனைத்து மாநிலங்களிலும் நிகழாண்டு முதல் பி.எட், எம்.எட் படிப்புக்கள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்படுகிறது.
மேலும் ஒருங்கிணைந்த (பி.எட், எம்.எட் படிப்பை சேர்த்து படிப்பவர்களுக்கு) 3 ஆண்டுகளாகவும், ஒருங்கிணைந்த பி.எஸ்.சி. பி.எட் அல்லது பி.ஏ. பி.எட் ஆகியபட்டப் படிப்புகள் நான்கு ஆண்டுகளாகவும் இருக்கும். மேலும் இரண்டு வருடம் படிக்கிற ஆசிரியர் பயிற்சி படிப்பில் எந்தவித மாற்றமும் இல்லை. எனவே தனியார்,அரசு கல்வியியல் கல்லூரிகள் புதிய விதிகளுக்கேற்ப பேராசிரியர்களை நியமிப்பதுடன் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.இக் கருத்தரங்கில் ஆசிரியர் கல்வித் துறைப் பேராசிரியர்கள், கல்வியியல் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

Thursday, February 19, 2015

ஒரே ஆண்டில் இரு பட்டங்கள் ஆசிரியர் பணி வழங்க உத்தரவு
ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி வழங்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.
திண்டுக்கல் தீபா தாக்கல் செய்த மனு: பி.ஏ., (தமிழ்) 2004--07 ல் படித்தேன். பி.எட்.,ஜூலை 2008ல் தேர்ச்சி பெற்றேன். 2008ல் எம்.ஏ., (தமிழ்) படிப்பில் சேர்ந்தேன். 2009 நவம்பரில் எம்.ஏ.,தேர்ச்சி பெற்றேன். முதுகலை பட்டதாரி (தமிழ்) ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு 2012 அக்டோபரில் எழுதினேன். 108 மதிப்பெண் பெற்றேன்.'எம்.ஏ., மற்றும் பி.எட்., ஒரே ஆண்டில் படித்துள்ளதால் விதிகள்படி பணி நியமனம் வழங்க முடியாது' என ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் 2013 ஜன.,20 ல் நிராகரித்தார். அதை ரத்து செய்து பணி வழங்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் வி.பன்னீர்செல்வம், ராமநாதன் ஆஜராகினர்.
நீதிபதி உத்தரவு: மனுதாரர் பி.ஏ., முடித்தபின் பி.எட்., படித்துள்ளார். பின் எம்.ஏ., படித்துள்ளார். பி.எட்., மற்றும் எம்.ஏ., ஒரே காலத்தில் படிக்கவில்லை. பணி மறுத்த உத்தரவு ரத்து செய்யப்
படுகிறது. மனுதாரருக்கு முதுகலை ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.

Saturday, January 10, 2015

பாரதியார் பல்கலை: பி.எட்., தொலைநிலை படிப்புக்கு சேர்க்கை
கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2015ம் கல்வியாண்டில் பி.எட் படிப்பில் சேர விரும்புபவர்கள் குறைந்தபட்சம் இரண்டு வருடம் இளங்கலை, முதுகலை அல்லது அரசு/தனியார் பள்ளிகளில் முழுநேர ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கல்வித்தகுதியாக இளங்கலையில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.
பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.500க்கான வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை பாராதியார் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிப்.,28க்குள் விண்ணப்பங்கள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். நுழைவுத்தேர்வு மார்ச் 29ல் நடைபெறுகிறது.
கூடுதல் விவரங்கள் அறிய பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
அஞ்சல் வழி மூலம் பி எட் வகுப்புகள் இனி இருக்காது?
பி.எட்,எம்.எட் ஆகிய படிப்புகளுக்கான காலஅளவு ஒருவருடத்தில் இருந்து இரண்டு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. +2 தேர்ச்சி பெற்றவர்கள் இளங்கலை படிப்புடன் பி.எட் படிப்பையும் சேர்த்து நான்கு ஆண்டுகளுக்கு படிக்ககூடிய வகையில், ஒருங்கிணைந்த பாடத்திட்ட முறையை நடப்பாண்டில் தொடங்க உள்ளதாக, மத்திய பள்ளி கல்வித்துறை செயலகம் தெரிவித்துள்ளது.
பி.எட் பயில்பவர்கள் குறைந்தபட்சம் 20 வாரங்களாவது மாணவர்கள் மத்தியில் வகுப்பறையில் பாடம் எடுக்கவேண்டும் என்று, மத்திய பள்ளிகல்வித்துறை செயலாளர் விர்ந்தா சாரப் தெரிவித்தார். அஞ்சல் வழி மூலம் பி எட் வகுப்புகள் இனி இருக்காது என்று நேற்று புதுடில்லியில் நடைபெற்ற மாநில பள்ளிகல்வித்துறை அமைச்சர்கள் மாநாட்டில் விர்ந்தா தெரிவித்தார்.