Tuesday, September 29, 2015

பி.எட்., கல்வி கட்டணம் உயர்கிறது


தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் உள்ள 7 அரசு பிஎட் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் பிஎட் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்களுக்கு 8,005 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இவர்களுக்கான கலந்தாய்வை உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், லேடி வெலிங்டன் கல்லூரியில் பேசியதாவது: பிஎட் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கி 5ம் தேதி வரை நடைபெறுகிறது. 2011ம் ஆண்டு 18 சதவீதமாக உயர்கல்வி மாணவர் சேர்க்கை வீதம் தற்போது 48 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்காக காரப்பாக்கத்தில் ரூ.38 கோடியில் புதிய கட்டிடம் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டப்படும். அரசு பிஎட் கல்லூரிகளில் தற்போது கல்வி கட்டணம் ரூ.2 ஆயிரமாகவும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமாகவும், சுயநிதி கல்லூரிகளில் 41 ஆயிரத்து 500கவும் உள்ளது. 2 ஆண்டுகளுக்கான கல்விகட்டணம் நிர்ணயம் செய்ய உயர்கல்வி கட்டண நிர்ணய குழுவான பாலசுப்பிரமணியன் கமிட்டியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் புதிய கட்டணம் குறித்து அறிவிப்பு வெளியிடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Saturday, September 26, 2015

பி.எட்., எம்.எட். துணைத் தேர்வு: பல்கலைக்கழகம் அறிவிப்பு


ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளான பி.எட்., எம்.எட். ஆகியவற்றுக்கான டிசம்பர் மாத துணைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வருகிற டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ள பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான துணைத் தேர்வுக்கான விண்ணப்பத்தைwww.tnteu.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக் கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ. 200 வீதமும், செய்முறைத் தேர்வுக்கு ரூ. 600 என்ற அளவிலும் கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தை "பதிவாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை' என்ற பெயரில் எடுக்கப்பட்ட வரைவோலையாக செலுத்த வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க அக்டோபர் 26 கடைசித் தேதியாகும். கடைசித் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் அபராதத் தொகை ரூ. 150 சேர்த்து நவம்பர் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Wednesday, September 16, 2015

பி.எட்., படிக்க ஐந்தே ரூபாய்!


தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிக்க, தமிழக அரசு, ஐந்து ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.தமிழகத்தில், 705 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., படிப்புகள் உள்ளன.
மொத்தம் உள்ள, 1,777 இடங்களுக்கு, 7,400 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். வரும், 28ம் தேதி, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கி, அக்., 5ம் தேதி முடிகிறது.பி.எட்., கல்லுாரிகளில், முதலாம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை, தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.
இதன்படி, முதலாம் ஆண்டு மாணவர்கள், கல்விக் கட்டணமாக, 2,070 ரூபாய் செலுத்த வேண்டும். தலித், பழங்குடியினர் மற்றும் அருந்ததி இன மாணவர்களுக்கு, கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ஆண்டுக்கு, ஐந்து ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.மற்ற கட்டணங்களை, தமிழக உயர்கல்வித் துறையின் உதவித்தொகை மூலம், கல்வி நிறுவனங்களே சரிசெய்து கொள்ளும். தனியார் சுயநிதி கல்லுாரிகளில், இந்தப் படிப்புக்கு, ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய் முதல், 80 ஆயிரம் ரூபாய் வரை,கட்டணம் வசூலிக்கின்றனர்.

பி.எட்., தரவரிசை பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு


அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கான தரவரிசைப் பட்டியல், வரும் 18ம் தேதி வெளியிடப்படுகிறது.தமிழகத்தில், ஏழு அரசு மற்றும் 14 அரசு உதவி கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும் 28ம் தேதி நடக்கிறது.
அரசு சார்பில், லேடி வெலிங்டன் கல்லுாரி, மாணவர் சேர்க்கையை நடத்துகிறது.மொத்தமுள்ள, 1,800 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 7,500 பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. மதிப்பெண்ணுக்கு ஏற்ப, 'வெயிட்டேஜ்' முறையில், தரம் நிர்ணயிக்கப்படுகிறது. தரவரிசை பட்டியல், 18ம் தேதி வெளியிடப்படும் என, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்

Saturday, September 12, 2015

தமிழகத்திலும் பி.எட். படிப்புக்கு இரண்டு ஆண்டுகள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தமிழகத்திலும் பி.எட், எம்.எட். ஆசிரியர் கல்விப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை தமிழக அரசு இறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் பி.எட். படிப்புக்கு இந்தக் கல்வியாண்டு (2015-16) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடத்தப்பட உள்ளது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய (2014) வழிகாட்டுதல்படி, பி.எட், எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் இந்தக் கல்வியாண்டு (2015-16) முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.
இதை, பிற மாநிலங்கள் அனைத்தும் ஏற்று நடைமுறைப்படுத்திய நிலையில், தமிழகம் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தது. தமிழகத்திலுள்ள சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கம் இந்தப் புதிய வழிகாட்டுதலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் நிகழாண்டில் பி.எட். படிப்புக் காலம் ஓராண்டா, இரண்டு ஆண்டுகளா என்ற குழப்பம் நீடித்து வந்தது. மேலும், இந்தப் படிப்பில் நிகழாண்டு மாணவர் சேர்க்கையும் தாமதமாகி வந்தது.
இதனிடையே, மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோதும், மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டது. இந்த நிலையில், பி.எட், எம்.எட். படிப்புக் காலம் நிகழாண்டில் தமிழகத்திலும் இரண்டு ஆண்டுகள்தான் என்பதை தமிழக அரசு இறுதி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இதுகுறித்து விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன முதல்வரும், பி.எட். மாணவர் சேர்க்கை செயலருமான ஆர்.பாரதி கூறியது:
என்.சி.டி.இ. வழிகாட்டுதலின் படி, தமிழகத்திலும் நிகழாண்டு முதல் பி.எட். படிப்புக் காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து, உத்தரவிட்டுள்ளது. எனவே, நிகழாண்டில் பி.எட், எம்.எட். படிப்புகளில் சேரும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் படித்தாக வேண்டும்.
மேலும், பி.எட். படிப்புக்கான கலந்தாய்வு வரும் 28-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முதல் நாளில் காலையில் மாற்றுத் திறனாளிகளுக்கும், மதியம் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.
செப்டம்பர் 29-ஆம் தேதி கணிதப் பாடப் பிரிவினருக்கும், 30-ஆம் தேதி இயற்பியல், வேதியியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.
அக்டோபர் 1-ஆம் தேதி தாவரவியல், விலங்கியல் பிரிவினருக்கும், 3-ஆம் தேதி தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவினருக்கும், 5-ஆம் தேதி காலையில் வரலாறு, புவியியல் வணிகவியல் பிரிவினருக்கும், மதியத்தில் பொருளாதாரம், மனை அறிவியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.
இதுதொடர்பான அறிவிப்பு கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார்.