Friday, July 24, 2015

கல்வியியல் பல்கலைக்கு இடைக்கால கமிட்டி அமைப்பு

கல்வியியல் பல்கலைக்கு இடைக்கால கமிட்டி அமைப்பு
ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் ஓய்வு பெற்றதை அடுத்து, பல்கலை பணிகளை கவனிக்க, உயர்கல்வித்துறை முதன்மை செயலர் தலைமையில், மூன்று பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பி.எட்., - எம்.எட்., - எம்.பில்., படிப்புகளை நடத்தும், 690 ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.இந்த பல்கலையின் துணைவேந்தராக இருந்த விஸ்வநாதன், 22ம் தேதியுடன் ஓய்வுபெற்றார். இவர், 2012 முதல் துணைவேந்தராக பணியாற்றியவர். பி.எட்., படிப்பில், 10 புதிய பாடப்பிரிவுகளைக் கொண்டு வந்தார்.
எம்.பில்., மற்றும் பி.எச்டி., ஆராய்ச்சிப் படிப்புகளையும் அறிமுகப்படுத்தினார்.பி.எட்., படிப்பில் ஒற்றைச் சாளர கவுன்சிலிங், 'ஆன்-லைன்' வருகைப்பதிவேடு, பல்கலை வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் போன்றபல திட்டங்களை அமல்படுத்தினார்.அவர் ஓய்வுபெற்ற நிலையில், பல்கலையின் பணிகளை கவனிக்க, மூன்று பேர் அடங்கிய இடைக்காலக் கமிட்டியை அரசு அமைத்துள்ளது. தமிழகஉயர் கல்வி முதன்மைச் செயலர் அபூர்வா, கல்லூரி கல்வி இயக்குனர் தேவதாஸ் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் கோவிந்தன் ஆகியோர் கமிட்டி யில் இடம் பெற்றுள்ளனர்.'இன்னும், மூன்று மாதங்களில், பல்கலைக்கு புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்படுவார்' என, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன

Saturday, July 18, 2015

பி.எட். கலந்தாய்வு: மீண்டும் லேடி விலிங்டன் கல்லூரியே நடத்துகிறது; எம்.மார்க் நெல்சன்


ஆசிரியர் கல்வியியல் கல்வி (பி.எட்.) மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மீண்டும் சென்னை லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனமே நிகழாண்டில் நடத்த உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.அரசு கல்வியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.எட். இடங்கள், சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சார்பில் ஒப்படைக்கப்படும் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை, பல ஆண்டுகளாக சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வந்தது.
கடந்த 2014-15 கல்வியாண்டில் இந்தக் கலந்தாய்வு நடத்தும் பொறுப்பு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. முதன்முறையாக கலந்தாய்வை நடத்திய பல்கலைக்கழகம், புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்தது.அதாவது, சென்னையில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த பி.எட். கலந்தாய்வை, இணையவழி மூலம் சென்னை, கோவை, சேலம், மதுரை ஆகிய நான்கு இடங்களில் நடத்தியது. அது மாணவர்களிடையேயும், பெற்றோரிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றபோதும், பி.எட். சேர்க்கை தொடர்பாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.
இந்த நிலையில், நிகழாண்டில் (2015-16) பி.எட். கலந்தாய்வு நடத்தும் பொறுப்பு மீண்டும் லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.இதுகுறித்து பல்கலைக்கழக உயரதிகாரி ஒருவர் கூறியது:
பி.எட். சேர்க்கை தொடர்பான அரசு உத்தரவு கடந்த வாரம் வழங்கப்பட்டது. அதில் கலந்தாய்வு ஒருங்கிணைப்பு அதிகாரியாக (நோடல்) விலிங்டன் சீமாட்டி கல்லூரி முதல்வர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.எனவே, நிகழாண்டில் கலந்தாய்வை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்த முடியாது. அந்தக் கல்லூரிதான் நடத்தும் என்றார்.

பி.எட். சேர்க்கை நடைமுறைகள் வெளியீடு: பயன்பாட்டு வேதியியல் பட்டமும் சேர்ப்பு


நிகழ் கல்வியாண்டுக்கான ( 2015-16) பி.எட். சேர்க்கை நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பயன்பாட்டு வேதியியல் (அப்ளைடு கெமிஸ்ட்ரி) துறையில் இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களும் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணையதளத்தில் இந்த நடைமுறைகள் இடம் பெற்றுள்ளன.
கணிதம், பயன்பாட்டு கணிதம், இயற்பியல், பயன்பாட்டு இயற்பியல், புவி இயற்பியல், உயரி இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், பயன்பாட்டு வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரித் தொழில்நுட்பம், தாவர உயிரியல், தாவர உயிரித் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அறிவியல், நுண் உயிரியல், வரலாறு, புவியியல், பயன்பாட்டு புவியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அப்ளிகேஷன்ஸ் உள்ளிட்ட துறைகளில் இளநிலை பட்டங்களை முடித்தவர்கள் பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

ஓ.சி. பிரிவினர் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணும், பி.சி, பி.சி.எம். பிரிவினர் குறைந்தபட்சம் 45 சதவீதமும், எம்.பி.சி. பிரிவினர் 43 சதவீதமும், எஸ்.சி, எஸ்.டி, எஸ்சிஏ பிரிவினர் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருப்பது அவசியம்.
பொருளாதாரம், வணிகவியல், மனை அறிவியல், அரசியல் அறிவியல், சமூகவியல், உளவியல், தத்துவவியல், இந்திய கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களும் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம். இதுவரை ஓராண்டாக இருந்துவந்த பி.எட். படிப்புக் காலம், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) வழிகாட்டுதலின்படி இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

பி.எட்., மாணவர் சேர்க்கை விதிமுறைகள் அறிவிப்பு


இந்த ஆண்டு, பி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தர வரிசை பட்டியலில், உயர் படிப்புக்கு ஏற்ற, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.கடந்த ஆண்டு வரை, பி.எட்., ஓராண்டு படிப்பாக இருந்தது. மத்திய அரசின் புதிய விதிமுறைகளின்படி, இந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
இம்மாத இறுதியில், பி.எட்., மாணவர் சேர்க்கையைத் துவங்க, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை முடிவு செய்துள்ளது. அதற்காக, புதிய விதிமுறைகளை, தமிழக கல்லுாரி கல்வி இயக்ககம் வெளியிட்டு உள்ளது. அதன் விபரம்:
* பி.எட்., படிப்பில் சேர, ஏதாவது ஒரு இளங்கலை படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
*எம்.பில்., - பிஎச்.டி., மற்றும் முதுகலை படிப்பு படித்தவர்களும், சேர முடியும்.
* இளங்கலை படிப்பில், முன்னேறிய வகுப்பினர், 50; பிற்படுத்தப்பட்டோர், 45; மிகவும் பிற்படுத்தப்பட்டோர், 43; தலித் மற்றும் அருந்ததியர், 40 சதவீத மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரரின் மதிப்பெண்களுக்கு ஏற்ப, தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். முதுகலை, 4; எம்.பில்., 5; பிஎச்.டி., 6 என 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும்.
* மேலும், 19 வகையான, 'ஆப்ஷனல்' பாடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* பி.எட்., மாணவர் சேர்க்கை, சென்னையில் உள்ள, லேடி வெலிங்டன் ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில் நடக்கும்.மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் தேதி மற்றும் கவுன்சிலிங் குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியாகும்.