Tuesday, October 4, 2016

பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
தமிழகத்தில் ஆசிரியர்கள் நியமன எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டதால், கல்வியியல் (பி.எட்.) பட்டம் பெற்றவர்களுக்கு பணி கிடைக்கவில்லை.
பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்தவர்களில் 3.82 லட்சம் பேரும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்தவர்களில் 2.69 லட்சம் பேரும், அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர்.
அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்கள் கடந்த 2 ஆண்டுகளாக நியமிக்கப்படவில்லை. கடந்த கல்வியாண்டில் ஏற்பட்ட 2,125 காலியிடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்தது. அவற்றில் 50 சதவீதம் இடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட்ட நிலையில், மீதமுள்ள 1,062 இடங்களை போட்டித் தேர்வின் மூலம் நிரப்ப கடந்த ஆண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பல பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்புக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல், இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனதுக்கான தகுதித் தேர்வு 2013-ஆம் ஆண்டு முதல் நடத்தப்படவில்லை. இதனால் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. அரசு பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர்களை நியமிக்க அறிவிக்கை வெளியிட்டும், இதுவரை பணி நியமனம் நடைபெறவில்லை.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு நெருங்குவதால் உடனடியாக போட்டித் தேர்வை நடத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வையும் தமிழக அரசு நடத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment